×

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தேர்தல் மாஜி தலைவர் தலைமையில் மேலும் ஒரு அணி போட்டி

நாமக்கல், செப்.26: எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர் சங்க தேர்தலில், மாஜி செயலாளர் தனி அணியாக போட்டியிட உள்ள நிலையில் மாஜி தலைவர் தலைமையில் மேலும் ஒரு அணி களத்தில் குதித்துள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு தென்மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் செயல்படுகிறது. இந்த சங்கத்தின் தலைவர், உபதலைவர், துணைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர், துணை செயலாளர், பொருளாளர் மற்றும் 75 செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கு, வரும் 13ம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 1509 உறுப்பினர்கள் வாக்களிக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான உறுப்பினர்கள், நாமக்கல்லில் இருக்கிறார்கள். 100க்கு குறைவான உறுப்பினர்கள் சேலம், பெங்களூரு, ஈரோடு போன்ற ஊர்களில் வசிக்கிறார்கள். தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. தேர்தல் குழுத்தலைவர் சுந்தரராஜனிடம், நேற்று தேர்தலில் போட்டியிட விரும்பும் சங்க உறுப்பினர்கள் 18 பேர், வேட்பு மனுக்களை வாங்கி சென்றனர். தேர்தலில் போட்டியிடும் உறுப்பினர்கள், வேட்பு மனு கட்டணமாக ₹5 ஆயிரம், சங்கத்துக்கு செலுத்த வேண்டும். கடந்த வாரம் சங்க உறுப்பினர்கள் சிலர், தனியாக கூட்டம் போட்டு, தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் என தேர்தல் குழுவிடம் மனு அளித்தனர். ஆனால், இதை தேர்தல் குழு ஏற்கவில்லை. திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என அறிவித்து அதற்கான பணிகளில் இறங்கியது.

 தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஏற்கனவே, கடந்த இரு வாரமாக சங்கத்தின் முன்னாள் செயலாளர் எஸ்எல்எஸ் சுந்தர்ராஜன் தலைமையில் ஒரு அணி உருவாகி, அவர்கள் சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று திடீர் திருப்பமாக சங்கத்தின் முன்னாள் தலைவர் நடராஜன் தலைமையில் ஒரு அணி உருவாகியுள்ளது. இந்த அணியின் ஆதரவாளர்கள் கூட்டம், நேற்று நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் முடிவு செய்யப்பட்டுள்ளனர். சங்கத்தின் தற்போதைய நிர்வாகிகள் பலரும், இந்த தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டி வரும் நிலையில், தற்போதைய துணைத்தலைவர் செந்தில், செயலாளர் பதவிக்கு இந்த முறை தனித்து போட்டியிடுகிறார். இதையடுத்து நேற்று, செந்தில் தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் குழுவினரை சந்தித்து ₹5 ஆயிரம் கட்டணம் செலுத்தி, வேட்பு மனுவை வாங்கி சென்றார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘செயலாளர் பதவிக்கு தனி அணியாக போட்டியிட முடிவு செய்துள்ளேன்,’ என்றார்.

 முன்னாள் செயலாளர் தலைமையில் ஒரு அணியும், முன்னாள் தலைவர் தலைமையில் ஒரு அணியும் உருவாகியுள்ளது. அந்த அணியில் போட்டியிடும் நபர்கள் குறித்த விபரங்கள் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் பரப்பப்பட்டு வருகிறது. இதனால்  தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஆயில் நிறுவனங்கள் கடந்த ஆண்டு நடத்திய டெண்டரில், 800 வாகனங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாகனங்களின் உரிமையாளர்கள், பொதுக்குழு கூட்டங்களில் நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்த தேர்தலில் வாக்குசேகரிப்பின் போது, இது முக்கிய பிரச்னையாக எதிரொலிக்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் 28ம் தேதி கடைசி நாள். 29ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது.

Tags : LPG ,team competition ,Tanker Lorry Owners Association ,Maj ,
× RELATED பாரத் காஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் லாரிகள் ஸ்டிரைக்